Wednesday, August 28, 2013

விடுமுறையின் ஏக்கம்


 

விடுமுறையின் ஏக்கம்

 
ஓர் ஆண்டுத்தேர்வின் விடுமுறை அது

நாளை 
மீண்டும் திறக்கும் பள்ளிக்கு எப்படி செல்வது என்றும்,
பாட்டியிடம் செய்யும் சேட்டைகளையும், விளையாட்டு நண்பர்களையும் விட்டு எப்படி பிரிவது என்று புரியாமல்
இன்றைய இரவிலிருந்தே வேதனையை சுமந்துகொண்டிருக்கிறான் மனதில்.

அந்த சிறு வேதனை கண்ணீராய் அவன் தலையணையை நனைக்க,
காரணம் புரியாத அந்த சிறுவனின் வேதனை கண்டு
மேகங்களும் கண்ணீர் சிந்தின.

இரவு முழுவதும் தொடர்ந்தது மழை

அதிகாலையில் ஏதோ சிறு மனமாற்றத்துடன் தொலைக்காட்சி பெட்டியை காண்கிறான்.
அதுவரை செய்திகள் என்றாலே வெறுத்தவன்
இன்று இறுதிவரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கிறான்
"மழையினால் பள்ளி விடுமுறை" என்ற அறிவிப்புக்காக.,
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

பின்பு காட்டுக்குள்ளே தொலைந்தவன் போல், சாப்பிடவும் மனமின்றி
அமைதியாய் நடந்துசென்றுகொண்டிருக்கிறான் பள்ளியை நோக்கி.

"பள்ளியின் அழைப்பு மணி ஒலிக்கும்போதெல்லாம் அவன் இதயத்தின் ஒலி சிறிது அதிகமாகவே ஒலித்தது"

காலைநேர கூட்டு பிரார்த்தனைக்காக அனைவரும் வரிசையில் அமைதியாய் நிற்க,
அவன் மனமோ பாட்டிவீட்டையும், அவள் கொடுத்து அனுப்பிய அதிரசத்தையும் நினைத்து எச்சில் முழுங்குகிறது.,
ஏங்கிய பெருமூச்சுடன்.

பின்பு அவன் கண்கள் சுற்றும்முற்றும் பார்க்க,
ஆங்கில ஆசிரியைக்கான இடம் காலியாக இருந்ததைக்கண்டு மகிழ்ச்சியடைகிறான்
அந்த பாட வேளையில் பாட்டிகொடுத்து அனுப்பிய அதிரசத்தையும், கடலைமிட்டாயையும் சாப்பிடலாம் என்று நினைத்து.

ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது

ஆசிரியர் ஏற்கனவே கொடுத்து அனுப்பிய வினாக்களை அந்த பாடவேளையில் படித்துக்காட்டவேண்டும் என்று மாணவதலைவன் சொன்னபோது.

அதன் பின் ஒவ்வொரு நொடிப்பொழதும் ஒரு யுகமாகவே கழிந்தன அவனுக்கு,
ஆனால் அவன் மனமோ பாட்டிவீட்டில் அவன் இருந்த நேற்றைய நினைவுகளிலிருந்து மீளமுடியாமல்
போராடிக்கொண்டிருந்தது.

மாலைவரை தொடந்த அவன் நினைவினை
பள்ளியின் இறுதிமணி கலைக்க,
அதன் ஓசை மறைவதற்குள் வேகமாக ஓடிச்சென்று வீட்டிலிருந்த நாள்காட்டியை புரட்டுகினான்,

அடுத்த விடுமுறை எப்போது வரும் என்று...

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...