Monday, December 22, 2014

ஒரு உண்மை தத்துவம்

முகம்பார்த்து பேசி பழகாத ஒருவரை
நாம் வெறுக்க காரணம்
நம்மில் இருக்கும்  அறியாமையும்
அதிகமான பொறாமையும்தான்!

Tuesday, September 2, 2014

விண்மீன்களுக்காய்...

"எனதழகு பாரடா -அங்கே
எப்படி இருக்கிறது!
எண்ணிக்கை அதிகம் நீ இருப்பினும்
எனக்கு நிகராகுமோ!
எத்தனை தொலைவிருந்து பார்ப்பினும் - நீர்
என்னை மட்டுமே பிரதிபலிக்கும்
எனக்குமட்டுமே ஒருநாள் விடுமுறை
உனக்கினி ஒன்றுமில்லை"

நீரிலே தெரியும் தன் பிம்பத்தைக்காட்டி தற்பெருமைகொண்டது வானிலவு.

தன்னிலை காட்டமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தது விண்மீன்.

தகுதியற்ற தற்பெருமை ஆடும் ஆட்டத்தை கண்டு ரசிக்க விரும்பாத இவ்வுலகினிறை.,

பாகுலத்தை வரவழைத்தது

பார்முழுதும் தீபமேற்றவும் சொன்னது;

ஏற்றிய தீபமெல்லாம் இரவினில் ஒளிர,
புத்துணர்ச்சியுடன் கண்ட விண்மீன்களுக்கு புரிந்துவிட்டது,
இதுவே தன் பிம்பமென்று

பின்
தலைக்கனத்துடன் சுற்றிய வெண்ணிலவின் பிம்பத்தை சுட்டெரித்து,
இரவின் சூரியனாகிவிட்டது.

கார்த்திகைமாத நட்சத்திர தீபம்.

Friday, August 29, 2014

கடல்-மேக காதல்

மேகத்தின் மீது காதல்...

காதலியின் நினைவிலே தினம்
அலைவீசிக்கொண்டிருக்கிறது கடல்நீர்.

சுற்றிவீசும் தென்றலையெல்லாம்
சூராவளியாக்கி
முற்றியகாமத்திற்கு முழுமருந்திட
கனவோடு வாழ்ந்தவள் கரம்நாடிச்சென்றது கடல்நீர்.

ஆகாயத்தில் இணைந்து -அவன்
அரவணைப்பிலே தவழ்ந்து
ஆடிப்பாடி திரிந்தது
ஆகாயமேகம்..

கரு சுமந்தது மேகம்..

கைவிட்டுசென்றது கடல்நீர்..

கடல்நீர்சென்ற சோகத்திலே
கால்போன போக்கிலே
கரைதாண்டி சென்ற (கரு)மேகம்
மின்னல் வெளிச்சத்தில் பெற்றெடுத்தது,
அழகிய மழைத்துளிகளை.

பின்
பெற்றெடுத்த மழைத்துளியை தொலைத்துவிட்டு, தொலைந்தும்போய்விட்டது அம்மேகம்..

தரையில் அனாதையாக திரியும் மழைத்துளி
ஆணென்றால் நதியிணைந்து கடல் கலப்பதும்;
பெண்னென்றல் ஆவியாகி மேகமாவதும்தான் இவர்களின் சுழற்சி வாழ்க்கை.

Thursday, August 7, 2014

ச ரி க ம ப த நி

சரி தானடி -உன்
கமகம மணப் பார்வை
பகரம் கண்டு
தன்னிலை மறந்த இவனுக்கு
நித்திரை என்பதேது!

சரிதான், ஆனாலும்

நித்திரையுண்டு - நம்
தனிமையில் ஆரோஹணம்நீ பாடி
பட்டுடல்மேனி உன்மேல் அவரோஹணம் நானிசைத்து
மஞ்சத்தின்மேல்
கட்டிக்கண் மூடி
ரிஷபக்காளையிவன்
சரீரம் சாந்தமானால்.

Thursday, July 17, 2014

மலை-மேக காதல்

(எத்தனை அழகு இந்த
அதிகாலை மேகங்களுக்கு!!
இத்தனை அழகுடன் எங்குதான் சென்றுகொண்டிருக்கின்றன
இந்த மேகங்கள்!)

கம்பீரமாய் உயர்ந்து,
பசுமையிலே புதைந்து,
தென்றலும் மணமும் சேர்த்தெழுப்பும்
அழகிய மலைமகன் அவன்.

அவனை,
தூரமிருந்து ரசிப்பதும்
அவன் நினைவினிலே தினம் மிதப்பதும்
அவனையே சுற்றிவருவதுமாயிருக்கும்
வெண்மேகமகள் அவள்.

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தன்காதலை உணர்த்திக்கொண்டேயிருந்தாள்
இம்மேகமகள்.

காதல் சொன்னாலும்
எற்றுக்கொள்ள ஏனோ மறுத்துவிட்டான்
அம்மலைமகன்.

நாட்கள் சென்றன..

உயிர்களின் உயிர் காத்த மலைமகன் உயிரை
உண்ணவந்தது இலையுதிர்காலம்.,
அதில்,
ஊமையாய் சிக்கி உயிர்விட ஆரம்பித்துவிட்டான் மலைமகன்.

தென்றல் வெப்பமனது,
மணம் மறைந்துபோனது,
நிழலில்வாழ்ந்த உயிர்களும்
இடம்மாறி சென்றிட,
அத்தனையும் இழந்து அனாதையாக ஆரம்பித்துவிட்டான் மலைமகன்.

பின்
தன்னுடல் வெப்பம் அதிகமாகி
மடிந்துபோகும் வழியிலே
மயங்கியும்விட்டான்.

மடிந்துபோக விட்டுவிடுமோ
காதல் நெஞ்சம்!

உரிமை எடுத்தது,

தன்னையே பிரித்து,
கண்ணீரில் குழைத்து,
மஞ்சுவாய் மலைமகன்மேல்படர்ந்து
உயிர்காத்து வந்தாள்,

உயிர்காத்து உயிர்காத்து
உருகியும் கொண்டிருந்தாள்,
மேகமகள்.

முடிவுக்கு வந்தது கோடைகாலம்..

முதல் மழைத்துளி மேகமகளையும்,
அடுத்த மழைத்துளி மலைமகனையும் தட்டியெழுப்ப,

தானேநாணி சென்றுவிட்டாள் மேகமகள்
தளிர்விட ஆரம்பித்துவிட்டான் மலைமகன்.

ராமுழுதுமான அவன் நினைவுடன்
இன்று
அதிகாலையிலே அழகாய்
ஒப்பனை செய்து
ஆனந்தமாய் காதல்சொல்ல சென்றுகொண்டிருக்கிறாள்
இம்மேகமகள்.

இம்முறை அதிக நம்பிக்கையுடன்.

Wednesday, July 2, 2014

இயற்கை

நீ
வாழுமிடமெல்லாம்
வனச்சோலை தெரியுதடி

உன்னைக்கான
இரு கண்கள் -தினம்
கட்டளை இடுகிறதடி

நீ
பூதுக்குலுங்கையிலே -மனம்
புத்துயுர் அடையுதடி

உன்
வாசம் பரவியதிலே -தென்றல்
தினம் தெருவில் ஆடுதடி

உனைத் தொட்டணைத்திட
மேகம்
கீழே இறங்குதடி

உன்
பாதம் நனைத்திட
அது நீரை பொழியுதடி

பட்டாம்பூச்சிகள் பல
உன் அழகில் பறக்குதடி

சில
பச்சோந்திகளும்
அதில் இணைய நினைக்குதடி

நீர் ஓடி வருகையிலே
மழை
நின்று பொழியுதடி

நீ துள்ளிகுதிக்கையிலே
மீன்கள்
ஆடி பாடுதடி

கருமேகம்
வெடித்திடவே
மின்னல் பிறக்குதடி

விண்மீன்கள்
மின்னிடவே
வெண்ணிலவு சிரிக்குதடி

நீலப்பெருங்கடலின்
எல்கை தெரியுதடி

அதை
காண நினைக்கையிலே
அது நீண்டே போகுதடி.

Tuesday, July 1, 2014

பாடல் வரிகளில் ஒன்று

என் நெஞ்சு தினம் வலிக்குது
உன் நெனப்பால தினம் கொதிக்குது

என் கண்ணு தூங்க மறுக்குது
என் கை பாட்டில் தேடுது

உனக்காக தினம் செலவழிச்சேன்
என் சொத்தெல்லாம் அடகுவச்சேன்

அது காத்துல போனது
இந்த காத்தாடி இப்போம் ஆடுது..

சாராய போத ஏறுது
சங்கதி உன்ன பாடுது
தள்ளாடி நானும் நடக்கையில
தாவணி உன்ன தேடுது

மூனாறு மல மேலே நீயும்
முன்னூறு அடிக்கு கீழ நானும்
உக்காந்து நானும் இருந்தாலும்
உம்முகம் தானா தெரியுது

பேனாவ நானும் எடுக்கையில
கையெழுத்து உம்பேராகுது
பெத்து எடுத்த தாயவிட
பாசம் உம்மேல கூடுது

முருகா jesus அல்லா
அவள முழுசா தந்திடு நல்லா

Monday, June 16, 2014

கனவில் வந்த கவிதைகளில் ஒன்று

நீயென்பதைத்தவிர வேறேதுமில்லை - உலகில்
உன்னையே நீ பொய்த்துப்போகவிட்டால்
உதவிக்கு வந்திடாது ஊர்க்கரம்
உணர்வாய் மனமே!

Saturday, May 31, 2014

உன் மந்திரப்புன்னகையால்..



உன் மந்திரப்புன்னகையில்
மயங்கிப்போன இக்குளகன்
குழம்பித்தவிக்கிறான்;
உன் கொழுநன்னாகிட போதும் - உன்
குடங்கையில் என் விரல்கள்
கோலமிட வேண்டும்.

பஞ்சிதங்களெல்லாம்
விரதமிருக்கிறது
பதுமை உன் பார்வை பட்டிட;
உன் பதியாகும் இவன்
ஆசையை ஏற்று
பரிசமிட அழைப்பாயோ - இல்லை
பார்வையாலே என்னைக்கட்டி
பைத்தியமாக்கி ரசிப்பாயோ!
 

Wednesday, May 28, 2014

சிறு நினைவூட்டல்

கவியெழுதி நாளாச்சி -என்
கற்பனையில் வரவில்லையேநீ ஏன்

காளமேகக்கூட்டத்தினூடே கலந்துவிட்டாயோயடி -என்
கருப்பழகி
கலந்திருப்பின் பொழிந்திடென் கற்பனைக்குளத்தில்
என் மனக்கானகம் காய்ந்துதிரத்தொடங்குமுன்
காட்சிதருவாய் சாரூபமாய் நீ.

Wednesday, February 26, 2014

நானும் என் சுயவிபரம் அடங்கிய தாளும்

இன்று ஓர் புகழ்பெற்ற இயக்குனரின் அலுவலகத்திற்கு வாய்ப்பு தேடி செல்ல,
அங்கே என் சுயவிபரம் (bio-data) அடங்கிய காகிதம் கேட்கப்பட்டது. அதில் ஓர் கவிதையும் சொல்ல வேண்டுமென சொல்லி எழுதப்பட்டதுதான் இந்த வரிகள்.

"இந்த தாள்கள் எனக்கு
வாய்ப்பளிக்க பயன்படாவிட்டாலும் பரவாயில்லை;
அலுவலக நொருக்குத்தீனிகளுக்கு
அடியில் வைத்து பரிமாற பயன்படட்டும்".

மூலையில் போட்டுவிடாதீர்கள்  முனுமுனுத்துக்கொண்டே இருக்கும்,
முடிந்தால்
முழுதாய் உபயோகித்துவிட்டு குப்பையில்  வீசிவிடுங்கள்.
புன்னகையுடன் விடைபெற்றுவிடும்.

இப்படிக்கு
நானும் என் சுயவிபரம் அடங்கிய தாளும்.

Tuesday, February 25, 2014

துரோகிகளுக்கு..

என் திறமை என்னவென்று தெரிந்தால்
நீ
நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய் !

என் குணம்  என்னவென்று  தெரிந்தால்
நீ
நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய்!!

என் ஜாதி என்னவென்று தெரிந்தால்
நீ
நிச்சயம் நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய்.!!!

பொதுமை பேசும் பசுத்தோல் போர்த்திய எருமைகளே !
கொஞ்சம் கவனியுங்கள்
உங்கள் மனதை.,

பொறாமையெனும் விஷச்செடி பூத்துக்குலுங்கி நாற்றம் கண்களிலிருந்து வெளிவர துவங்கிவிட்டது.

செடியை வேருடன் நீக்குவது உன் விருப்பம் ,
ஆனால்,
பூக்களையாவது அறுவடை செய்துவிடு.,
காரணம்,
நாற்றம் உன் உண்மை உருவத்தை உலகிற்குகாட்டி தொடர்ந்து நடிக்கவிடாமல் செய்துவிடும்.

Monday, February 17, 2014

நிலாப்பெண்

மாலை பின்பொழுதில்
எங்கு சென்றுவிடுகிறான் இவன்

இன்னும் எத்தனை இரவுகள்
தனியாய் காத்திருப்பது.,

என,
தினம்  நினைத்து
உருகி தேய்ந்துகொண்டிருக்கிறது,
நிலாப்பெண்.

ஆதவனை நினைத்து.

Thursday, February 13, 2014

பெண் சிசுக்கொலை

உங்கள் ஊடலில்
உண்மை இல்லை - அதன்
கூடலில் காதல் இல்லை
காமமெனும் மாயயை வைத்து
கட்டிலில் நீ இருந்த நேரம்
வியர்வை
மூச்சி
அத்தனையும் பொய்யடா!.

உண்மையாக இருந்திருந்தால்
கொன்றிருக்கமாட்டாய்!,
பிறந்தது
பெண் குழந்தை எனும் போது.

Saturday, February 8, 2014

பனிமூட்டம்


நிலம்தொட நினைக்கும்
மேகங்கள்
கட்டிய
பாலம்தானோ - இந்த
பனிமூட்டம்.

Saturday, February 1, 2014

முதுமையின் ஏக்கம்

இன்னும் எத்தனை நாள்
அனாதையாக வாழவேண்டிய
இந்த நிலை

ஆண்டுக்கு ஒன்றாய்
அறுபதுமாத தவத்தில் பெற்ற
பஞ்சமாபுதல்வர்கள்,
ஆளுக்கொரு திசையில்
பஞ்சம் பிளைக்க சென்றுவிட,

ஆதரவின்றி நாங்கள்
பிரிந்து வாழும் இந்த நிலை
இன்னும் எத்தனை நாள்.

பேத்தி பிறந்த செய்தி
கடிதத்தில்

அவள் பெரியவளான
செய்தி தொலைபேசியில்

அவள் திருமணம்
நிச்சயித்ததை மட்டும்
நேரடியாக கண்டோம்
பக்கத்து வீட்டு நண்பரின்
கணிணியில்.

இப்படியே
காலங்கள் மாற்றம்
கண்டன.
நாங்கள் காணவில்லை.

அதனால்தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
அவர்களின் நினைவுகளை இன்றும்
நெஞ்சில் சுமந்துகொண்டு.

அவன் மாதம் பணம் அனுப்ப
தவறவில்லை;

பாசம் விசாரிக்க தவரவில்லை;
ஆனால்
ஏனோ மனம்வரவில்லை
எங்களுடன சேர்ந்தோ அல்ல
சேர்த்தோ வாழ.,

இந்த முதுமைகால
நிலையில் அவனுடன்
சேர்ந்து வாழ மட்டுமே ஆசை,

பாசம் அதற்கு பாரமில்லை
ஆனால்
அந்த நகர-நாகரீக
பண்பாட்டுக்குத்தான் எங்களை
பிடிக்கவில்லை,

பிடித்திருந்தால்,
இன்றும்
பிடித்திருக்கும்,

சிறுவயதில் என் முந்தானையில் வளர்ந்த என் மகனுக்கு
இன்றைய என் முதுமை.

இதயத்தின் கையெழுத்து

"உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுதல் இயல்பே"

இலக்கணத்தின் அர்த்தம்
கண்டேன் அந்த திருமண
பதிவு புத்தகத்தில்,

அவள்
என்னவளாகிய பின்,
என் கடைமெய்யெழுத்தும்,
அவள் முதல்மோனையும்
சேர்த்து
அவள் எழுதிய முதல்
கையெழுத்தில்...

ஆட்டோகிராப்பாக என் இதயத்திலும்..

முத்தம்

அன்பு மகிழ்ச்சியின்
வெளிப்பாடாய்
உயிர்களிடத்தில் இருக்கும் - ஓர்
உன்னத பகிர்மானம்
முத்தம்.

தற்பெருமை

தற்பெருமை பேசிக்கொண்டிருக்கும் நேரங்களைத்தான்
எதிரிகள்
முன்னேருவதர்க்கான வாய்ப்பாக
கொடுத்துவிடுகிறோம்.

Friday, January 31, 2014

இரவு

உழைத்துக்களைத்தவன்
ஓய்வு பெற
ஆதவன் கொடுத்த - ஓர்
அற்புத நிழல்
இரவு

Thursday, January 30, 2014

காதல் என்பது...

காதல் புனிதமானது
காதல் தெய்வீகமானது
காதல் இந்த
உலகை வழிநடத்தும்
கருவியானது.,

உண்மைதான்...

அந்த
காதல் என்பது,
உண்மையான
அன்பாய் இருந்தால்,
அது உயிராய் இருந்தால்
உறுதியாய் இருந்தால்
அந்த காதல் வர அற்பகாரணம்
ஏதும் இல்லாமல் இருந்தால்
அதில்
முழுமையாய் விட்டுக்கொடுத்து இறுதிவரை பயணிக்கமுடிய என்றால்..,
காதல் உண்மைதான்.!

காதல்தான் அன்பு
அந்த அன்பே கடவுள்
அந்த கடவுள்தான்
பெற்றோர்கள்.

ஒன்றை அழித்துவிட்டு
மற்றொன்றில்
அன்பை செலுத்துவதை விட,
ஒன்றின் ஆசிவாதத்துடன்
மற்றொன்றில் செலுத்த அந்த
அன்பின் அளவு அதிகமாகும்.
அதனால் மகிழ்ச்சியும்
அதிகமாகும்.

ஆனால் என்றும்
மறந்துவிடவேண்டாம்,
காதல் பணத்தில் இருந்தாலோ,
அல்லது காமதின்மீது மட்டும்
இருந்தாலோ,
இல்லை இன்னபுற அழகில்
இருந்தாலோ -அது
நிலையானதல்ல என்பதை.

பெற்றவர்கள்
வசதியை காரணம்
சொல்லியோ,
இல்லை
ஜாதி மதத்தை காரணமாய்
சொன்னாலோ
துணிந்து போராடுங்கள்.,

இல்லை,
காதல்தான் நம் எதிர்காலம்
அந்த எதிர்காலம்தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையை அழகாய்
மகிழ்ச்சியாய் இறுதிவரை
கொண்டுசெல்வோம் என்ற
உறுதியுடன்
கடைசி வரை வாழ்ந்துகாட்டுங்கள்கள்.
உண்மை காதலுக்கு
ஓர்
உவமையாய்.

நம் சமுதாயம்

பணத்தை சில்லறையாக மாற்றி
பயணம் செய்கின்றனர் சிலர்..

சிறு சிறு உதவிகள் செய்து
உதவிக்கரம் நீட்டும்
சிறுவர்கள், முதியவர்கள்
எவருக்கும் போய்ச்சேர்வதில்லை
அந்த உதவியின் பலனாய்
அந்த நாணயங்கள்.

ஆனால்
ஒரு கை தட்டினாலே
எடுத்துவைத்துக்கொள்கிறார்கள்
பலர்,
சில்லறைகளை அல்ல,
நாணய தாள்களை.
சிறு பயத்துடன்...

தேவையில்லையென
தூக்கிவீசும் பலருக்கு
தெரியுமோ தெரியாதோ
இதையே தேவையென நினைத்து
வாழ்பவர்களின் நிலை

மதுபானக்கடையில் சிலர்
ஊழியர்களுக்கு கொடுக்கும்
காசு
போதையில் இருந்தாலும்
கொடுப்பதில்லை
வெளியே இருக்கும்
முதியவர்களுக்கு

வாழ்த்துக்களில்தான்
உண்மையான வரம் இருக்கிறது..

அந்த வாழ்த்துக்களை
பிறருக்கு வரமாய் கொடுத்து
கடவுளாய் இருப்பவன் எத்தனைபேர்
இல்லை
அதை சாபமாய் கொடுத்து
சாத்தானாக அலைபவன்
எத்தனைபேர்

சமுதாயம் உருவாவதல்ல..
உருவாக்கப்படுவது.
நாம்
எந்த மாதிரி சமுதாயத்தை
உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

Wednesday, January 29, 2014

மனம்

மனதை பத்தியமாய் கடைபிடித்திட,
மருந்துண்ணும் வேளையும் வருமோ வாழ்வில்.

Tuesday, January 28, 2014

வாழைக்கன்று




நீ பூப்பெய்து
கரு சுமக்கும் முன்பே

உன்
காலடியில்
கால்ஊன்றி
நிமிர்ந்து வந்துவிடுகிறது
உன் வாரிசு

இந்த வாழைக்கன்று.

Monday, January 27, 2014

சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு)

அழகான வார்த்தைகள்
அறியாமலே மாட்டியது சிந்தையில்

அதன் அழகினூடே பயணித்துக்கொண்டிருக்க
புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தது
இமைகள் மூடிய விழி

இரண்டரை நிமிட பயணமது

பின் இறுதியில் -அதை
எழுதிட நினைக்க
என்னை மறக்கடித்துவிட்டு
என் மனதிடம் சொல்லிச்சென்றது

சோம்பலின் விளைவு என்னவென்று.

Sunday, January 26, 2014

என்னவள்

கட்டிலில் நீயோ பேதை- என்
கைவிரல் பிடித்திட பெதும்பை
அழகாய் எனைக்கட்டி
அணைப்பதில் நீயோ மங்கை
அணைந்துவிடமலே என்னுடன்
எரிவதில் நீயோ அரிவை
அன்பாய் மடியில் நானிருக்க -என்
தலைமுடி கோதும் நீ தெரிவை
தெரியாமலேயே எனை தீண்டிப்பார்க்க
நீதானடி என் பேரிளம்பெண்.

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நனிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன்

வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனையை கேட்க நேரமில்லை

ஒருவேளை
அவை என்னைப்போன்ற வேறொருவரின் விருப்பத்திற்கிணங்க சென்றுகொண்டிருக்கலாம் என்று எண்ணி அவற்றை தடுத்து நிறுத்தாமல் என் தவத்தை கலைத்துவிட்டேன்

கண் திறந்து பார்க்க

வாடிய பயிர்களெல்லாம் என் முன் அரைமயக்கநிலையில் புன்னகைத்தன

அடம்பிடிக்கவில்லை

அமைதிகாத்தன என் பதிலுக்காய்

காத்திருக்கசொல்லி பனித்துளியிடம் கடன் கேட்க சென்றேன்

இது கோடைகாலம்
நான் வர அனுமதியில்லை
எனச்சொல்லி வருத்தம் தெரிவித்தது பனித்துளி

பரவாயில்லை என பதில் சொல்லி

சூரியனிடம் சில நாள் அதிக வெப்பம் கொடுத்துவிடாதே என்றும்
காற்றிடம் நான் வரும்வரை மென்காற்று கொடுத்து பயிரை பார்த்துக்கொள்
எனசொல்லி நீர்வேண்டி பயணம் செல்ல நினைத்தேன்.
ஆனால் இந்நிலையில் என் பயிர்களை தனியாய் விட்டுசென்றிட மனமில்லை

என் செய்வேன் நான்

வியர்வை துளிகளும் இல்லா என் உடலில் திரவமாய் மிச்சமிருப்பது
என் உதிரம் மட்டும்தான்

இல்லாமையின் உச்சத்தில் எனைத்தள்ளிவிட்ட காலத்தை எண்ணி பயிர்களுக்கு நடுவே அமர்ந்திருக்க

மழை வந்த மகிழ்ச்சியில் பயிர்கள் போட்ட சத்தம் என்னை விண்நோக்கி பார்க்கவைத்தது

சூரியன் புன்னகைத்தான்

பதிலுக்கு புன்னகைத்துவிட்டு பயிர்களை பார்க்க
மீண்டும் சப்தமிட்டன அரைமயக்க நிலையிலும் அதிக ஒலியுடன்

அப்போதுதான் உணர்ந்தேன்
என் கண்ணில் இன்னும் சில துளி நீர் இருந்திருக்கிறது என்று

இறுதியாய் ஓர் முடிவெடுத்து
உதிரம் பாய்ச்சிட நினைத்து
சதைகளிடம் அனுமதி கேட்டேன் அதை கீறிட

என் சதைகள்தானே
நான் எண்ணியவறே சரி என்றது

கூர்ஆயுதம் கையில் ஏந்தி
குருதிநீர் பாய்ச்சிட நினைத்தேன்
சூரியன் வேண்டாமென்றது
சுடுமணலுக்கு தேவையே என்று
இடக்கை சதையை கிழித்தேன்
உதிரத்தில் வேகமில்லை
கூடுதலாய் கொஞ்சம் கிழித்தேன்
என்ன இதுவென்றது பயிர்
விருந்து நீர் என்றேன்
துள்ளிப்பாடியது பயிர்
சில நிமிடங்களில் தூங்கிவிடுவேன்
எனச்சொல்லி மயங்கிவிழுந்தவன்தான் நான்

சில மனித்துளிகளில் என் கனவில் பெருமழை

வெள்ளநீர் என் மூச்சிக்குழலேற சென்றிட
கண்விழித்துவிட்டேன்

ஆம்
கண்டது கனவல்ல

ஏதோ ஓர் வெள்ளைப்போர்வை என்மேல் போர்த்தியிருந்தது

என்னவென்று தொட்டுப்பார்க்க
என் கைபிடித்து காயத்திற்கு மருந்திட்டு வாழ்த்திச்சென்றது
எனக்காகவே வந்திருந்த மழை மேகம்.

Saturday, January 25, 2014

நினைவுகள்

ஐந்தரை வயது உனக்கு - அப்போது
என் முதல் தோழியாய் நீ

எதிரெதிர் வீடுகளில் வசித்திட - தினம்
உன் பெயர் சொல்லியே அழைத்திடுவேன் விளையாட

இன்றும் ஞாபமிருகிறது
அந்த கட்டிமுடிக்கப்படாத வீடு..

அங்கே குவிக்கப்பட்டிருந்த மணற்குவியல்களும், அதில்  செடிகளும் பூக்களுமாய்
சிறு நந்தவனம் போல் காட்சியளித்துக்கொண்டிருக்கும்.

பூக்கள் கொஞ்சம் பறித்து
கடுகுச்செடியென்று ஒன்றுண்டு
அதன் காய்கள் சேர்த்து
வாடாமல்லி அதன் இலை
நெருஞ்சிமுள் பூ என
அத்தனையும் கொண்டு
சிறு கடை வைத்திருப்பேன்
நீ காய்கறி வாங்குவதாய் வருவாய்

அரிசி நீ கேட்பாய்- மணல்
அள்ளி நான் கொடுப்பேன்

இருப்பதையெல்லாம் என்னவென்று கேட்டு எல்லாமும் வாங்கிச்செல்வாய்
பின் என்னிடமே கொடுப்பாய்

மணற்குவியலின் ஒருபுறம்  நீ மறுபுறம் நான்
ஆளுக்கொருபுறமாய் தோண்டி
சிறு சுரங்கம் அமைத்திடுவோம் பின் அடுத்த எதிர்பக்கட்திலிருந்து
கைகள் குலுக்கிடுவோம்...

இன்னும் எத்தனை ஞாபகங்கள் தோன்றுகிறது..
அந்த கட்டிமுடிக்கப்படாத வீட்டை
இன்று கண்மூடி காண்கையில்..

நினைவுகள் தொடரும்....

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...