Friday, June 9, 2017

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி
நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன்

வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனையைக்கேட்க நேரமில்லை

ஒருவேளை,
அவை என்னைப்போன்ற வேறொருவரின் விருப்பத்திற்கிணங்க சென்றுகொண்டிருக்கலாம் என்று எண்ணி, அவற்றை தடுத்து நிறுத்தாமல் என் தவத்தை கலைத்துவிட்டேன்

கண் திறந்து பார்க்க...

வாடிய பயிர்களெல்லாம் என் முன் அரைமயக்கநிலையில் புன்னகைத்தன..

அடம்பிடிக்கவில்லை.,

அமைதிகாத்தன என் பதிலுக்காய்,

காத்திருங்கள் என பதில்சொல்லி, பனித்துளியிடம் கடன் கேட்க சென்றேன்...

இக்காலம் எனக்கானதல்ல
எனச்சொல்லி வருத்தம் தெரிவித்தது பனித்துளி

பரவாயில்லை எனசொல்லி,

சூரியனிடம் சில நாள் அதிக வெப்பம் கொடுத்துவிடாதே என்றும்
காற்றிடம் நான் வரும்வரை மென்காற்று கொடுத்து பயிரை பார்த்துக்கொள்
எனகூறி, நீர்வேண்டி பயணம் செல்ல நினைத்தேன்...

ஆனால், இந்நிலையில் என் பயிர்களை தனியாய் விட்டுசென்றிட மனமில்லை.

என்செய்வேன் நான்...

வியர்வை துளிகளும் இல்லா என் உடலில் திரவமாய் மிச்சமிருப்பது
என் உதிரம் மட்டும்தான்..

இல்லாமையின் உச்சத்தில் எனைத்தள்ளிவிட்ட காலத்தை எண்ணி பயிர்களுக்கு நடுவே அமர்ந்திருக்க.,

மழை வந்த மகிழ்ச்சியில் பயிர்கள் போட்ட சத்தம் என்னை விண்நோக்கி பார்க்கவைத்தது...

சூரியன் புன்னகைத்தான்,

பதிலுக்கு புன்னகைத்துவிட்டு பயிர்களை பார்க்க,
மீண்டும் சப்தமிட்டன அரைமயக்க நிலையிலும் அதிகஒலியுடன்...

அப்போதுதான் உணர்ந்தேன்
என் கண்ணில் இன்னும் சில துளி நீர் இருந்திருக்கிறது என்று..

இறுதியாய் ஓர் முடிவெடுத்து,
உதிரம் பாய்ச்சிட நினைத்து
சதைகளிடம் அனுமதி கேட்டேன் கீறிட,

என் சதைகள்தானே
நான் எண்ணியவறே சரி என்றது.,

"கூர்ஆயுதம் கையில் ஏந்தி
குருதிநீர் பாய்ச்சிட நினைத்தேன்
சூரியன் வேண்டாமென்றது
சுடுமண்ணுக்குத் தேவையே என்றெண்ணி
இடக்கை சதையை கிழித்தேன்
உதிரத்தில் வேகமில்லை
கூடுதலாய் கொஞ்சம் கிழித்தேன்
என்ன இதுவென்றது பயிர்
விருந்துநீர் என்றேன்
துள்ளிப்பாடியது பயிர்
சில நிமிடங்களில் தூங்கிவிடுவேன்
எனச்சொல்லி மயங்கிவிழுந்தவன்தான் நான்..

சில மணித்துளிகளில் என் கனவில் பெருமழை..

வெள்ளநீர் என் மூச்சிக்குழலேறிச்சென்றிட
கண்விழித்துவிட்டேன்

ஆம்
கண்டது கனவல்ல

ஏதோ ஓர் வெள்ளைப்போர்வை என்மேல் மொத்தமாய் போர்த்தியிருந்தது

என்னவென்று தொட்டுப்பார்க்க
என் கைபிடித்து காயத்திற்கு மருந்திட்டு வாழ்த்திச்சென்றது
எனக்காகவே வந்திருந்த மழை மேகம்.

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...