Wednesday, March 29, 2017

உன் நினைவின் நொடிப்பொழுதில்...

கடற்கரை காற்றே
கரைவரை வந்திடு
கரையினில் வந்து என்
கவலைகள் கொன்றிடு

கனநேரம் நானின்கு இருந்தாலும்
நினைவாலே கண்கள் குளமாகும்

தெருவோரம் தேங்கிய மழைநீரில்
எனைக்காட்டி உன்னை விரட்டினேன்
எனை இன்று ஏதும் செய்யாமல்
உனைத்தேட என்னை முடுக்கினேன்

இடப்புற இதயம்
எதனால் ஆனதோ ஏதோ
சிறு கண்ணீர் துளிக்கெல்லாம்
கரைந்து மடிய நினைக்கிறது

உன் பிரிவு எனைத்தாக்கவில்லை
உண்மை;
உன் நினைவுத் தாக்குதலில்
என்னால் மீள இயலவில்லை

Thursday, March 23, 2017

தீவின் தேவதைக்கான அட்சரம்


படிக்கும்பொழுது புரிவது வேறு
புரியும்பொழுது எழுதியவனை நினைப்பது வேறு
நினைக்கும்பொழுது எழுத்துக்களின் வழியே
அவர் மனதை உணர்வது வேறு

எழுத்துக்களிலே அவள் ஆன்மாவை பார்த்தேன்
வழக்கத்தைவிடவும் இது அத்தனை அழகு
ஆயிரம் தேவதைகளின் மொத்தம் அது

உடல்விட்டு மனம் நீக்கி
தனியொன்றாய் இரண்டைவைத்து
உடலிடம் சொல்லிச்சென்றேன்.,
”அவளோடு அரைநாளிகை
பேசிவருகிறேன், அதுவரை தனித்திரு”

உடன் வருவேனென்றது உடல்.
”அவசரம் வேண்டாம்,
உனை சந்திக்க துளிசம்மதமாவது தேவை
அதுவரை காத்திரு” என சொல்லி,
பறந்து சென்றேன்..

எங்கும் பச்சைநிற புல்வெளிகள்
இயற்கை, தன் மொத்த அழகையும்
அவளுக்காகவே கொடுத்துக்கொண்டிருந்தது.
ஆம்,
அழகான ஆன்மாவின் சேவகன்தானே இயற்கை.

பின், தொலைவிலிருந்து வந்த அவள் மகிழமணம்
ஓர் சிவந்தவனம்நோக்கி என் பயணத்தை திருப்பியது.

சிகப்புவனம் அவளுக்கானது
மகிழமணம் அவளுடையது
ஆம் இதே ஈர்ப்புவிசைதான்
அந்த எழுத்துக்களிலிருந்தும் என்னை ஈர்த்தது
அப்படியென்றால், நான் அவளை நெருங்கிவிட்டேன்!
ஆம், உண்மையில் நெருங்கிவிட்டேன்!
ஆனால், திசை தெரியவில்லயே..?

வடதிசையில் கேட்கும் சிரிப்பின் ஓசை அவளுடையதா..
நிச்சயம் இருக்காது, அவள் சிரிப்பிற்குத்தான் சத்தம் கிடையாதே
பின் எங்கே இருப்பாள்..

செடியாய் வளரும் மருதாணியே
கொடியாகி எங்கே செல்கிறாய்..
பதில் சொல்,
என் மொழிகள் புரிகிறதா..

பதிலேதுமில்லை..

ஏய்.. உன்னைத்தான் கேட்கிறேன்..
பதிசொல்.. என சொல்லி.,
ஒரு இலையை கிள்ள,
அதன் ஈரம் என் விரல்நுனியை சிகப்பாக்கிவிட்டது

இரவின் காத்திருப்பிலே கிடைக்கும்
இச்சிகப்பு சாயம், தொட்டவுடன் கிடைப்பதேனோ..

நிச்சயம், இது அவள் கைகள் தேடியே செல்லவேண்டும்..

ஏய்.. கொடியாகிச்செல்லும் மருதாணியே
திசைகாட்டிச்சென்றமைக்கு நன்றி
கிள்ளிவிட்டேனே என்றெண்ணி கோபம் கொள்ளாதே
அவள் சம்மதம் கிடைப்பின் உனைநானே
மாலையாக்கி அவள் கழுத்திலிடுகிறேன்
தேடலில் நேரம் அதிகமாகிவிட்டது..
விரைவாய் செல்ல வேண்டும், வருகிறேன்.
என சொல்லி,
பறந்துசென்றேன்..

வழக்கமாக, விண்ணில் தெரியும் மின்னல்கள்
பூமியில் ஆடிக்கொண்டிருக்க,
என்னவென்று, பார்த்தேன்,

வெண்ணிறபூக்களால் செய்யப்பட்ட
பொண்ணூஞ்சலில் ஆனந்தமாய் ஆடிக்கொண்டிருந்தாள்.
தேவதைகள் அழகென்றால்
அவள் ஆனந்தமோ அதனினும் அழகு

பின்,அடுத்த சில நிமிடங்களிலேயே
அவளுடன் பேச முயற்சித்துவிட்டேன்

”எழுத்திலே உன் ஆன்மாவை பார்த்தேன்
இப்புவியில் நான் கண்ட ஒரேயொரு பேரொளி நீ
உன்னோடு உறவாடிட ஆசை
ஏதும் சாத்தியமா” என்றேன்.

பதிலேதுமில்லை,

ஒருவேளை, என் குரல்கள் அவளை எட்டியிருக்காது என்றென்னி, சத்தமாய் என் ஆசை கூறினேன்..
மீண்டும் பதிலில்லை.

இவளிடமிருந்து பதிலில்லை என்றால், நிச்சயம் என் குரல்கள் அவளுக்கு எட்டவில்லை என்றுதான் பொருள்
மரியாதைகளின் சக்தி அறிந்தவளாயிற்றே.

பின்புதான் உருவமின்றி வந்த என் நிலை புரிந்து, உடலையும் உடன் அழைத்துவந்திருக்கலாமேயென்று எண்ணினேன்.

ம்…ஏன்தான் இந்த மனிதன் மட்டும் இயற்கையிடமிருந்து இப்படி தனித்திருக்க விரும்புகிறானோ..! உலகிற்கே ஒரு மொழியென்றால், இவனுக்கு மட்டும் தனி மொழி..
அதுவும், உடல் இருந்தால் மட்டுமே பகிர்ந்துகொள்வது சாத்தியம்.

பின்,கடைசியில் என் குரல்கள் கேட்கும் இயற்கையிடமே உதவிகள் கேட்ட தயாரானேன்.

ஏய் இயற்கையே.. இரவுகளே..
வெகு தூரமிருந்து அவள் காண வந்தேன்
வந்தவன், உடல்விட்டு வந்துவிட்டேன்
மன்னியுங்கள், காரணம்,
போலியின்றி பேசவேண்டுமென்பதே விருப்பம்.
நான் வந்தசெய்தி நீங்கள் மட்டுமே அறிவீர்கள்:
என் குரல்கள் நீங்கள் மட்டுமே உணர்வீர்கள்:
உதவி ஒன்று செய்யவேண்டும்,
என் ஆசைகள் அவளிடம் நான் கூறக்
கேட்டிருப்பீர்கள் என்றெண்ணுகிறேன்.,
அவள் மனிதமொழிகளுடன் இருக்கிறாள்
என் மனமொழிகள் கேட்டிருக்கவாய்ப்பில்லை
ஆதலால், இயற்கையே, நீ
என் ஆசைகளை தென்றலுடன் சேர்த்து
அவளிடம் சொல்லுங்கள், இரவுகளே
என் வருகையை கனவாக்கி
அவள்கண்ணிலே காட்டுங்கள்.

என அன்புக்கட்டளையிட்டு,
வருகிறேன் எனசொல்லி புறப்பட்டேன்..
பின் உடலுடன் ஒன்றிவிட்டேன்.

நினைவுகளை எழுத்தாக்கி பின் நினைத்துப்பார்க்க,
அதே சிகப்பு வனத்தில் ஆனந்தமாய் ஆடிக்கொண்டேயிருக்கிறாள்.

Saturday, March 18, 2017


கண்ணிலே
காதல் சமைப்பாள்
இமைதிறப்பின் பொங்கிவழியும்
ஈர்ப்புவிசைக்கான
மற்றுமொரு உதாரணம்

Thursday, March 16, 2017

மூக்குத்தி காதல்


பெண்மை அழகென்றால் அந்த பெண்மைக்கு அழகுதான் அந்த மூக்குத்தி

மூக்குத்திகளின் மீதான எனது காதல்
எங்கிருந்து வந்தது
                                                                                                               
என் விழிகள் கண்ட முதல் முகம் அவள்
அவளின் அடையாளம் அந்த மூக்குத்தி

விவரமறியா வயதில் அவள் முகங்களில் தவழ்ந்து விளையாடியிருக்கலாம்
அவள் முத்தமிடும் நேரம் அந்த மூக்குத்தியும் என்னை முத்தமிட்டிருக்கலாம்
எது எப்படியோ
அந்த மூக்குத்திக்கும் எனக்குமான இப்பந்தமே என் வாழ்க்கையின் ஆரம்பம்.


இன்றும் நினைவிருக்கிறது எனது இரண்டாம் வகுப்பின் பள்ளி நாட்கள்
ஒரு வெளிவாசல் இருபுறம் மரத்தட்டியால் மறைக்கப்பட்டிருக்கும் அந்த வகுப்பறையில்
எத்தனை சிறு பெஞ்சுகள் என்று ஞாபகமில்லை
ஆனால் அவள் இருந்தது இரண்டாவது பெஞ்ச் ஓரம்

சில உருவங்கள் ஆசிரியர்கள் காலை நேர கூட்டு பிரார்த்தனை வாய்ப்பாட்டு க்ளாஸ் என எத்தனையோ இன்றும் மங்களாய் நினைவிருந்தாலும்,.
அன்றைய அவள் முகமும் அந்த மூக்குத்தி அழகும் இன்றும் மனதில் பிரகாசமாகவே மிளிர்கிறது.\

அவள் இரத்த உறவுகள்கூட ஞாபகம் வைத்திருக்குமாவென தெரியவில்லை
ஆனால் எனக்குள் அவள் இன்றும் ஒளி குறையா காட்சிப்படங்களே

அவளை நான் நேராக பார்த்திருக்கிறேன்
அவளைவிடவும் அந்த மூக்குத்தியை

ஏதோ ஓர் தகர டப்பாவில் இருக்கும் இனிப்பு மாத்திரைகளை
ஆசிரியர் கொடுக்க, அதை அவளிடம் கொடுத்திருக்கிறேன்..
அவளுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன்.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே உள்ள பள்ளி அது

சில பிரம்படிக்கு பயந்து குருட்டு மனப்பாடம்செய்த காலத்தின் ஆரம்ப நாட்களில் ஆரம்பமான எனது வேண்டுதல்களில்,                                        
எனக்கு அடி விழமென்ற கவலையை விட
அடி வாங்கும்  பெயர்பட்டியலில் அவள் பெயர் இருக்கக்கூடாது என்று வேண்டிய நாட்களே அதிகம்
எனது வேண்டுதல்களும் அதிகமாகவே பலித்துவிடும்
அதில் ஓர் அலாதி இன்பம்

காமம் அறியா பருவம் அது
உண்மையில் ஹார்மோன்களுக்கு சம்பந்தமில்லாததுதானோ இந்த காதல்.

எட்டாம் வகுப்பு முடிந்த பின்
அவள் வேறு பள்ளி நான் வேறு பள்ளி
பார்ப்பது அரிது

சில வருடங்களுக்குப்பின் பள்ளி நாட்களில் உடன்படித்த மற்றொரு பெண்ணிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது..
அவளைபற்றி விசாரிக்கவே இவளிடம் பேச்சை தொடர்ந்தேன்

அப்பேச்சி, இனி யாரிடமும் அவளைப்பற்றி விசாரிக்கக்கூடாது என்பதில் முடிந்தது..

பின்,

காலம் கடந்து ஒரு சோதனைக்காலத்தில், சொந்த ஊரில் தலைமறைவாய் வாழும் வாழ்க்கை வாழ்ந்த நேரத்தில்
ஒரு நாள் அவளை காணும் வாய்ப்பு..

பள்ளிகாலத்தில் வெறும் நொடிக்கணக்கில் மட்டுமே பேசிய நான்,
இன்று சில மாற்றங்களுன் தொடர்ந்தேன்..

”(அவள் பெயர் சொல்லி) எப்டி இருக்க?”
ம்.. நல்லா இருக்கேன்
Work பன்றியா..
இல்ல.. ஊருக்கு போறேன்..”


அதுக்குள்ள பஸ் வந்துடுச்சி..
பஸ்ல இருந்து பாத்தா..
கை காட்டனும்னுதான் தோனிச்சி..
ஆனா அதை கண்ணால காட்டிக்கிட்டோம்

பஸ் போய்டுச்சி..
உண்மைலயே இயற்கைக்கும் குழந்தைகளுக்குமானது என் புன்னகை
இடையில் நீ வந்ததும் ஓர் ஆச்சர்யம்தான்.


அடுத்தமுறை அவளை காணும் வாய்ப்பு கிடைத்தால்
”உனக்கு இந்த மூக்குத்தி ரொம்ப அழகா இருக்க்கு” என்று சொல்ல ஆசை.
ஆனால் இனி நிச்சயம் அதை சொல்லமாட்டேன் என்பது தெரியும்.. ஒருவேளை இதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் புரிந்து தெரிந்துகொள்வாள்.

உண்மையில், எங்கெங்கெல்லாம் மூக்குத்திகளை காண்கிறேனோ
அங்கெல்லாம் ஏதோ ஓர் மகிழ்சி மொத்தமாய் சூழ்ந்துகொள்கிறது

அம்மா தோழி காதலி தேவர்மகன் ரேவதி vj சித்ரா என தொடரும் இந்த பட்டியல் இன்னும் நீளவேண்டும் என்பதே என் விருப்பம்.

Wednesday, March 15, 2017

உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள்

அவளுக்கென்று ஆசை இலட்சியம் ஏதும் கிடையாது
அவளொரு நடமாடும் தனிமரம்
அவள் எதிர்பார்ப்பெல்லாம் அந்நிழலில் வந்து விளையாடும்
அச்சின்னஞ்சிறு குழந்தைகளின் வருகைக்காகத்தான்.

ஒவ்வொருமுறை குழந்தைகளின் வருகையின் போதும் அவள்
தன்னையே விறகாக்கி சமைப்பாள்;
பொம்மைகேட்பின் தன் கிளைகளையே உடைத்து மரபொம்மையும் செய்வாள்

அவள் கடந்தகாலம் மிக வித்தியாசமானது
ஓர் செல்வந்தனின் மகள் அவள்
இனம் கடந்து அவ்வூரில் அவன் மட்டுமே செல்வந்தன்
பலர் அவள் வீட்டின்  வேலையாட்கள்தான், அவளையும் சேர்த்து.
காரணம், அவள் சோம்பேறியல்ல..

அவளுக்கு தன் குடும்பங்களின் மீதும் சொந்தங்களின் மீதும் அளவுகடந்த அன்பு
அதே அன்பினால் அடிமுட்டாளான கதைகளும் உண்டு.

இளைமைக்காலம் முதல் மறைமுக மகிழ்ச்சியற்றதாகவும், அதன்பின் நேரடித்துன்பங்களாலும் நிறையப்பெற்றதுதான் அவள் வாழ்க்கை.
அவள் தொலைத்த பொக்கிஷங்கள் ஏராளம்
விதி அவளை அதிஷ்டமில்லாதவளாக்கிவைத்தே அழகுபார்த்தது
தனிமை அவளுக்கு வாழ்நாள் சாபம், எனினும்
பூமியின் நரக நெறுப்பு அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றே

எத்தனை துன்பம் உலகம் கொடுத்தாலும்
எதிகாலத்தின் மீது அதீத நம்பிக்கை அவளுக்கு..
அவளின் எதிகாலம் உடனடியானது அல்ல,
இரண்டு தலைமுறைகளுக்குப்பின்னானது.
இடைப்பட்ட வாழ்க்கையிலும்
மானிட விதிகளை சரியாய் உபயோகித்து
கட்டிப்பார் செய்துபார் என்ற இரு சவால்களையும் சாதாரணமாக நடத்திக்காட்டியவள் அவள்

இவள் ஓய்வெடுத்து யாரும் கண்டதில்லை
சுறுசுறுப்பின் அர்த்தங்களை எறும்புகளிடமிருந்து கற்றவள்.
அவள் ஆன்மாவாகிவிட்டாள் ஆனால்
அவள் ஆத்மா அமைதியடையவில்லையென்பதே உண்மை.
அடுத்த சில வருடங்களில் ஓரளவு நிம்மதி கிடைக்குமென நம்பியிருந்தாள்
ஆனால் நிம்மதியோ உயிருடன் இருக்கும்வரை அவளை கவனிக்கவேயில்லை..
அவள் சேர்த்துவைத்தாள்
அவளுக்காய் பயன்படுத்த்வில்லை
பயன்படுத்திய தொப்புள்கொடி உறவுகளும்
அவள் பயனற்றுப்போன வேளையில் அதிகம் பரிதவிக்கவில்லை.,
காரணம், முதுமைக்குப்பின் மரணம் இயற்கைதானே என்ற நிலையாயிருக்கலாம்.
ஆனால் உண்மையில்,
அவள் முதுமையால் வீழவில்லை
அவளின் முடியாமையால் வீழ்ந்தாள்.

யாருக்கும் பாரமாக இல்லாமலிருக்க
எமனை அழைப்பாள்
அவனுக்கு இவள் மொழிகள் புரிந்திடக்கூடாதென்பது
இவள் வரமாய் பெற்ற சாபங்களுல் ஒன்று

கேட்டதை கொடுக்கும் ஆட்கள் இருந்தும்
கொடுப்பதைக்கூட தின்கமுடியாத வலிகள் அவளுக்கு
குழந்தையாக இருப்பின்
தாலாட்டி வலிபோக்க தாய் இருப்பாள்
பாவம் முதுமையில் தாயெங்கே தேடுவாள்

முதுமையின் மழலைச்சொல் புரியா பிள்ளைகளைப்பெற்ற
முதுமைகளின் முதுமைக்காலம் மிகக்கொடியது – மிகக்கொடியது அவள் வாழ்க்கை

குழந்தைகளின் மழலைச்சொல் போலவே
முதுமைகளின் சொற்களும் கேட்போர்க்கு ஓர் கவலை நீக்கும் மருந்து.
ஆனால் மனித நாகரிகயில்பிற்கு எதிரானதாய் அங்கிகரிக்கப்படாமல் அங்கிகரிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் யார் சொன்ன வார்த்தைகளோ,
அது உறவுகளின்மீதும் படர்ந்து உயிரருப்பதுதான் வேதனை.

பருவகால மாற்றத்தில் முதுமைகள் தனிமைப்படுத்த்ப்படவேண்டுமென்பதே விதி
அவ்விதியில் வரம்பெற்றவர் வாழ்க்கயில், துனைக்கு கணவனோ மனைவியோ உடனிருக்கலாம்.
தனிமையில் முதுமை பெருஞ்சாபம், அதிலும் கொடியது, கட்டியவர் உயிருடனிருந்தும் கவனிக்கப்படாமலிருப்பது.

இவள் பழங்கதை கேட்டால்
உற்சாகமாய் நிறைய சொல்வாள்
வெறும் பழையதும் மாம்பழமும்
அமிர்தம்போல் உண்பாள்
ஏய்.. கிளவி, தாய்க்கிளவியென்றால்
கோபமில்லாமல் ”என்னல” வென்பாள்
அதிகாரம் செய்து அதட்ட,
வாரியலால் அடிக்க உனக்கொருத்தி வருவாள் அன்று
வாய்மூடி உண்பாய் என்பாள்
மறு ஜென்மமே வேண்டாமென்றாள்
இறந்ததும் நெருப்பிலிடுங்களென்றாள்
சாம்பலை அருகிலிலோடும் பரணியாற்றில்
வீசிடுங்களென்றாள்
பேயாய் வரமாட்டேன்
பயப்படாதிருங்களென்றாள்

மறுஜென்மம் உண்மையென்றால்
வேண்டாமென்றாலும் அது உனக்கானது
ஏற்ற-இறக்கம் மேடு-பள்ளம் இன்ப-துன்பங்களை
சமமாய் கொடுக்கும்  இயற்கை,
உனக்கு மட்டும் துன்பங்களையே
அதிகம் கொடுத்திருக்கிறது.
மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகவே நீ மீண்டும்  பிறப்பெடுக்கலாம்.

வாழ்த்துக்கள்.

Monday, March 13, 2017

சூத்திரங்கள் மாறட்டும்

பொருத்திருந்து இகழ்தல்
அறிவின்மைதானே
அறிவின்மை நீயே
பொறுமையின் காத்திருப்பில்
நற்குணம் நின்று காப்பாயாக
பிறப்பின் சூத்திரம் தலையெழுத்தாய்
மாற்றுவதுதானே மனிதகுணம்
சூத்திரம் மாற்ற வந்தவன் நீ
நல்லகம் மாறாமல் கொடும்புறம் மாற்றிடு
காத்திருப்பின் நேரங்களில்
சூத்திரங்கள் இனி மாறட்டும்.

Sunday, March 12, 2017

ஏய் மனமே...! கேள்

வீடு வந்துசேர்ந்திடு மனமே
அது உனக்கான இடமன்று
உடல் உணர்வின்றி தவிப்பது
உயிருக்கு வலிக்கிறது
கட்டியிழுத்து வந்திடலாம்
கடிவாளம் உனக்கேது.
கேள்,
நிகழ்கால போதைகள்
கடந்தகாலம் நினையாது;
கடந்தகாலம் நினைக்க
மறுக்கும் இக்கலியில்
நிகழ்கால போதைகளின்
பிரிதல்கள் ஆனந்தமதானே
தவிர்த்து வருந்திடத்தேவையில்லை.
கொண்டாடும் நேரமிது
இனி கொண்டாடு.

Saturday, March 11, 2017

மீன்களின் மொழி ராகமானது _ விண் மீன்களில் நிலவு ராத்திரி தேடுது

தெள்ளத்தெளிகண்ணாலும் அதன்
சீறிய ஒளியாலும்
மெல்லத்தானிங்கு இருக்கிறேன் என்று
கண்ணிமையால் காட்சிபரப்புவாள்
இடப்புறம் வகிடெடுப்பாள்
வாய்மூடி கண்சிரிப்பாள்
வராத வார்த்தைகளையெல்லாம்
வரவேற்க எனையும்சேர்த்தழைப்பாள்
குங்குமம் கொஞ்சம்கோதி
நடுநெற்றியில் புள்ளிவைப்பாள்
புள்ளிகளின் நாட்களை ஒன்றாக்கி
புதுக்கோலம் வரைந்துவைப்பாள்
மூக்குத்தி நுனி மூக்கினோரம்
தென்றல் ஆடவைப்பாள்
கம்மல்களும் அழகுதானென்று
தென்றலையே சொல்லவைத்தாள்
இன்று,
மீன்களின் மொழி
ராகமானது _ விண்
மீன்களில் நிலவு
ராத்திரி தேடுது

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...