Wednesday, March 15, 2017

உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள்

அவளுக்கென்று ஆசை இலட்சியம் ஏதும் கிடையாது
அவளொரு நடமாடும் தனிமரம்
அவள் எதிர்பார்ப்பெல்லாம் அந்நிழலில் வந்து விளையாடும்
அச்சின்னஞ்சிறு குழந்தைகளின் வருகைக்காகத்தான்.

ஒவ்வொருமுறை குழந்தைகளின் வருகையின் போதும் அவள்
தன்னையே விறகாக்கி சமைப்பாள்;
பொம்மைகேட்பின் தன் கிளைகளையே உடைத்து மரபொம்மையும் செய்வாள்

அவள் கடந்தகாலம் மிக வித்தியாசமானது
ஓர் செல்வந்தனின் மகள் அவள்
இனம் கடந்து அவ்வூரில் அவன் மட்டுமே செல்வந்தன்
பலர் அவள் வீட்டின்  வேலையாட்கள்தான், அவளையும் சேர்த்து.
காரணம், அவள் சோம்பேறியல்ல..

அவளுக்கு தன் குடும்பங்களின் மீதும் சொந்தங்களின் மீதும் அளவுகடந்த அன்பு
அதே அன்பினால் அடிமுட்டாளான கதைகளும் உண்டு.

இளைமைக்காலம் முதல் மறைமுக மகிழ்ச்சியற்றதாகவும், அதன்பின் நேரடித்துன்பங்களாலும் நிறையப்பெற்றதுதான் அவள் வாழ்க்கை.
அவள் தொலைத்த பொக்கிஷங்கள் ஏராளம்
விதி அவளை அதிஷ்டமில்லாதவளாக்கிவைத்தே அழகுபார்த்தது
தனிமை அவளுக்கு வாழ்நாள் சாபம், எனினும்
பூமியின் நரக நெறுப்பு அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றே

எத்தனை துன்பம் உலகம் கொடுத்தாலும்
எதிகாலத்தின் மீது அதீத நம்பிக்கை அவளுக்கு..
அவளின் எதிகாலம் உடனடியானது அல்ல,
இரண்டு தலைமுறைகளுக்குப்பின்னானது.
இடைப்பட்ட வாழ்க்கையிலும்
மானிட விதிகளை சரியாய் உபயோகித்து
கட்டிப்பார் செய்துபார் என்ற இரு சவால்களையும் சாதாரணமாக நடத்திக்காட்டியவள் அவள்

இவள் ஓய்வெடுத்து யாரும் கண்டதில்லை
சுறுசுறுப்பின் அர்த்தங்களை எறும்புகளிடமிருந்து கற்றவள்.
அவள் ஆன்மாவாகிவிட்டாள் ஆனால்
அவள் ஆத்மா அமைதியடையவில்லையென்பதே உண்மை.
அடுத்த சில வருடங்களில் ஓரளவு நிம்மதி கிடைக்குமென நம்பியிருந்தாள்
ஆனால் நிம்மதியோ உயிருடன் இருக்கும்வரை அவளை கவனிக்கவேயில்லை..
அவள் சேர்த்துவைத்தாள்
அவளுக்காய் பயன்படுத்த்வில்லை
பயன்படுத்திய தொப்புள்கொடி உறவுகளும்
அவள் பயனற்றுப்போன வேளையில் அதிகம் பரிதவிக்கவில்லை.,
காரணம், முதுமைக்குப்பின் மரணம் இயற்கைதானே என்ற நிலையாயிருக்கலாம்.
ஆனால் உண்மையில்,
அவள் முதுமையால் வீழவில்லை
அவளின் முடியாமையால் வீழ்ந்தாள்.

யாருக்கும் பாரமாக இல்லாமலிருக்க
எமனை அழைப்பாள்
அவனுக்கு இவள் மொழிகள் புரிந்திடக்கூடாதென்பது
இவள் வரமாய் பெற்ற சாபங்களுல் ஒன்று

கேட்டதை கொடுக்கும் ஆட்கள் இருந்தும்
கொடுப்பதைக்கூட தின்கமுடியாத வலிகள் அவளுக்கு
குழந்தையாக இருப்பின்
தாலாட்டி வலிபோக்க தாய் இருப்பாள்
பாவம் முதுமையில் தாயெங்கே தேடுவாள்

முதுமையின் மழலைச்சொல் புரியா பிள்ளைகளைப்பெற்ற
முதுமைகளின் முதுமைக்காலம் மிகக்கொடியது – மிகக்கொடியது அவள் வாழ்க்கை

குழந்தைகளின் மழலைச்சொல் போலவே
முதுமைகளின் சொற்களும் கேட்போர்க்கு ஓர் கவலை நீக்கும் மருந்து.
ஆனால் மனித நாகரிகயில்பிற்கு எதிரானதாய் அங்கிகரிக்கப்படாமல் அங்கிகரிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் யார் சொன்ன வார்த்தைகளோ,
அது உறவுகளின்மீதும் படர்ந்து உயிரருப்பதுதான் வேதனை.

பருவகால மாற்றத்தில் முதுமைகள் தனிமைப்படுத்த்ப்படவேண்டுமென்பதே விதி
அவ்விதியில் வரம்பெற்றவர் வாழ்க்கயில், துனைக்கு கணவனோ மனைவியோ உடனிருக்கலாம்.
தனிமையில் முதுமை பெருஞ்சாபம், அதிலும் கொடியது, கட்டியவர் உயிருடனிருந்தும் கவனிக்கப்படாமலிருப்பது.

இவள் பழங்கதை கேட்டால்
உற்சாகமாய் நிறைய சொல்வாள்
வெறும் பழையதும் மாம்பழமும்
அமிர்தம்போல் உண்பாள்
ஏய்.. கிளவி, தாய்க்கிளவியென்றால்
கோபமில்லாமல் ”என்னல” வென்பாள்
அதிகாரம் செய்து அதட்ட,
வாரியலால் அடிக்க உனக்கொருத்தி வருவாள் அன்று
வாய்மூடி உண்பாய் என்பாள்
மறு ஜென்மமே வேண்டாமென்றாள்
இறந்ததும் நெருப்பிலிடுங்களென்றாள்
சாம்பலை அருகிலிலோடும் பரணியாற்றில்
வீசிடுங்களென்றாள்
பேயாய் வரமாட்டேன்
பயப்படாதிருங்களென்றாள்

மறுஜென்மம் உண்மையென்றால்
வேண்டாமென்றாலும் அது உனக்கானது
ஏற்ற-இறக்கம் மேடு-பள்ளம் இன்ப-துன்பங்களை
சமமாய் கொடுக்கும்  இயற்கை,
உனக்கு மட்டும் துன்பங்களையே
அதிகம் கொடுத்திருக்கிறது.
மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகவே நீ மீண்டும்  பிறப்பெடுக்கலாம்.

வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...