Thursday, March 23, 2017

தீவின் தேவதைக்கான அட்சரம்


படிக்கும்பொழுது புரிவது வேறு
புரியும்பொழுது எழுதியவனை நினைப்பது வேறு
நினைக்கும்பொழுது எழுத்துக்களின் வழியே
அவர் மனதை உணர்வது வேறு

எழுத்துக்களிலே அவள் ஆன்மாவை பார்த்தேன்
வழக்கத்தைவிடவும் இது அத்தனை அழகு
ஆயிரம் தேவதைகளின் மொத்தம் அது

உடல்விட்டு மனம் நீக்கி
தனியொன்றாய் இரண்டைவைத்து
உடலிடம் சொல்லிச்சென்றேன்.,
”அவளோடு அரைநாளிகை
பேசிவருகிறேன், அதுவரை தனித்திரு”

உடன் வருவேனென்றது உடல்.
”அவசரம் வேண்டாம்,
உனை சந்திக்க துளிசம்மதமாவது தேவை
அதுவரை காத்திரு” என சொல்லி,
பறந்து சென்றேன்..

எங்கும் பச்சைநிற புல்வெளிகள்
இயற்கை, தன் மொத்த அழகையும்
அவளுக்காகவே கொடுத்துக்கொண்டிருந்தது.
ஆம்,
அழகான ஆன்மாவின் சேவகன்தானே இயற்கை.

பின், தொலைவிலிருந்து வந்த அவள் மகிழமணம்
ஓர் சிவந்தவனம்நோக்கி என் பயணத்தை திருப்பியது.

சிகப்புவனம் அவளுக்கானது
மகிழமணம் அவளுடையது
ஆம் இதே ஈர்ப்புவிசைதான்
அந்த எழுத்துக்களிலிருந்தும் என்னை ஈர்த்தது
அப்படியென்றால், நான் அவளை நெருங்கிவிட்டேன்!
ஆம், உண்மையில் நெருங்கிவிட்டேன்!
ஆனால், திசை தெரியவில்லயே..?

வடதிசையில் கேட்கும் சிரிப்பின் ஓசை அவளுடையதா..
நிச்சயம் இருக்காது, அவள் சிரிப்பிற்குத்தான் சத்தம் கிடையாதே
பின் எங்கே இருப்பாள்..

செடியாய் வளரும் மருதாணியே
கொடியாகி எங்கே செல்கிறாய்..
பதில் சொல்,
என் மொழிகள் புரிகிறதா..

பதிலேதுமில்லை..

ஏய்.. உன்னைத்தான் கேட்கிறேன்..
பதிசொல்.. என சொல்லி.,
ஒரு இலையை கிள்ள,
அதன் ஈரம் என் விரல்நுனியை சிகப்பாக்கிவிட்டது

இரவின் காத்திருப்பிலே கிடைக்கும்
இச்சிகப்பு சாயம், தொட்டவுடன் கிடைப்பதேனோ..

நிச்சயம், இது அவள் கைகள் தேடியே செல்லவேண்டும்..

ஏய்.. கொடியாகிச்செல்லும் மருதாணியே
திசைகாட்டிச்சென்றமைக்கு நன்றி
கிள்ளிவிட்டேனே என்றெண்ணி கோபம் கொள்ளாதே
அவள் சம்மதம் கிடைப்பின் உனைநானே
மாலையாக்கி அவள் கழுத்திலிடுகிறேன்
தேடலில் நேரம் அதிகமாகிவிட்டது..
விரைவாய் செல்ல வேண்டும், வருகிறேன்.
என சொல்லி,
பறந்துசென்றேன்..

வழக்கமாக, விண்ணில் தெரியும் மின்னல்கள்
பூமியில் ஆடிக்கொண்டிருக்க,
என்னவென்று, பார்த்தேன்,

வெண்ணிறபூக்களால் செய்யப்பட்ட
பொண்ணூஞ்சலில் ஆனந்தமாய் ஆடிக்கொண்டிருந்தாள்.
தேவதைகள் அழகென்றால்
அவள் ஆனந்தமோ அதனினும் அழகு

பின்,அடுத்த சில நிமிடங்களிலேயே
அவளுடன் பேச முயற்சித்துவிட்டேன்

”எழுத்திலே உன் ஆன்மாவை பார்த்தேன்
இப்புவியில் நான் கண்ட ஒரேயொரு பேரொளி நீ
உன்னோடு உறவாடிட ஆசை
ஏதும் சாத்தியமா” என்றேன்.

பதிலேதுமில்லை,

ஒருவேளை, என் குரல்கள் அவளை எட்டியிருக்காது என்றென்னி, சத்தமாய் என் ஆசை கூறினேன்..
மீண்டும் பதிலில்லை.

இவளிடமிருந்து பதிலில்லை என்றால், நிச்சயம் என் குரல்கள் அவளுக்கு எட்டவில்லை என்றுதான் பொருள்
மரியாதைகளின் சக்தி அறிந்தவளாயிற்றே.

பின்புதான் உருவமின்றி வந்த என் நிலை புரிந்து, உடலையும் உடன் அழைத்துவந்திருக்கலாமேயென்று எண்ணினேன்.

ம்…ஏன்தான் இந்த மனிதன் மட்டும் இயற்கையிடமிருந்து இப்படி தனித்திருக்க விரும்புகிறானோ..! உலகிற்கே ஒரு மொழியென்றால், இவனுக்கு மட்டும் தனி மொழி..
அதுவும், உடல் இருந்தால் மட்டுமே பகிர்ந்துகொள்வது சாத்தியம்.

பின்,கடைசியில் என் குரல்கள் கேட்கும் இயற்கையிடமே உதவிகள் கேட்ட தயாரானேன்.

ஏய் இயற்கையே.. இரவுகளே..
வெகு தூரமிருந்து அவள் காண வந்தேன்
வந்தவன், உடல்விட்டு வந்துவிட்டேன்
மன்னியுங்கள், காரணம்,
போலியின்றி பேசவேண்டுமென்பதே விருப்பம்.
நான் வந்தசெய்தி நீங்கள் மட்டுமே அறிவீர்கள்:
என் குரல்கள் நீங்கள் மட்டுமே உணர்வீர்கள்:
உதவி ஒன்று செய்யவேண்டும்,
என் ஆசைகள் அவளிடம் நான் கூறக்
கேட்டிருப்பீர்கள் என்றெண்ணுகிறேன்.,
அவள் மனிதமொழிகளுடன் இருக்கிறாள்
என் மனமொழிகள் கேட்டிருக்கவாய்ப்பில்லை
ஆதலால், இயற்கையே, நீ
என் ஆசைகளை தென்றலுடன் சேர்த்து
அவளிடம் சொல்லுங்கள், இரவுகளே
என் வருகையை கனவாக்கி
அவள்கண்ணிலே காட்டுங்கள்.

என அன்புக்கட்டளையிட்டு,
வருகிறேன் எனசொல்லி புறப்பட்டேன்..
பின் உடலுடன் ஒன்றிவிட்டேன்.

நினைவுகளை எழுத்தாக்கி பின் நினைத்துப்பார்க்க,
அதே சிகப்பு வனத்தில் ஆனந்தமாய் ஆடிக்கொண்டேயிருக்கிறாள்.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...