Thursday, July 17, 2014

மலை-மேக காதல்

(எத்தனை அழகு இந்த
அதிகாலை மேகங்களுக்கு!!
இத்தனை அழகுடன் எங்குதான் சென்றுகொண்டிருக்கின்றன
இந்த மேகங்கள்!)

கம்பீரமாய் உயர்ந்து,
பசுமையிலே புதைந்து,
தென்றலும் மணமும் சேர்த்தெழுப்பும்
அழகிய மலைமகன் அவன்.

அவனை,
தூரமிருந்து ரசிப்பதும்
அவன் நினைவினிலே தினம் மிதப்பதும்
அவனையே சுற்றிவருவதுமாயிருக்கும்
வெண்மேகமகள் அவள்.

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தன்காதலை உணர்த்திக்கொண்டேயிருந்தாள்
இம்மேகமகள்.

காதல் சொன்னாலும்
எற்றுக்கொள்ள ஏனோ மறுத்துவிட்டான்
அம்மலைமகன்.

நாட்கள் சென்றன..

உயிர்களின் உயிர் காத்த மலைமகன் உயிரை
உண்ணவந்தது இலையுதிர்காலம்.,
அதில்,
ஊமையாய் சிக்கி உயிர்விட ஆரம்பித்துவிட்டான் மலைமகன்.

தென்றல் வெப்பமனது,
மணம் மறைந்துபோனது,
நிழலில்வாழ்ந்த உயிர்களும்
இடம்மாறி சென்றிட,
அத்தனையும் இழந்து அனாதையாக ஆரம்பித்துவிட்டான் மலைமகன்.

பின்
தன்னுடல் வெப்பம் அதிகமாகி
மடிந்துபோகும் வழியிலே
மயங்கியும்விட்டான்.

மடிந்துபோக விட்டுவிடுமோ
காதல் நெஞ்சம்!

உரிமை எடுத்தது,

தன்னையே பிரித்து,
கண்ணீரில் குழைத்து,
மஞ்சுவாய் மலைமகன்மேல்படர்ந்து
உயிர்காத்து வந்தாள்,

உயிர்காத்து உயிர்காத்து
உருகியும் கொண்டிருந்தாள்,
மேகமகள்.

முடிவுக்கு வந்தது கோடைகாலம்..

முதல் மழைத்துளி மேகமகளையும்,
அடுத்த மழைத்துளி மலைமகனையும் தட்டியெழுப்ப,

தானேநாணி சென்றுவிட்டாள் மேகமகள்
தளிர்விட ஆரம்பித்துவிட்டான் மலைமகன்.

ராமுழுதுமான அவன் நினைவுடன்
இன்று
அதிகாலையிலே அழகாய்
ஒப்பனை செய்து
ஆனந்தமாய் காதல்சொல்ல சென்றுகொண்டிருக்கிறாள்
இம்மேகமகள்.

இம்முறை அதிக நம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...